தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே, 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. அதிக ஓட்டுகள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தினர், மூன்று முறையாக ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம்விட்டு தேர்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பொன்னங்குப்பம் ஊராட்சியில் இருந்து துத்திப்பட்டு கிராமத்தைப் பிரித்து தனி ஊராட்சியாக அறிவித்து, தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என அறிவித்திருந்தனர். அதன்படி, 6ஆம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலை, பொன்னங்குப்பம் கிராமத்தினர் புறக்கணித்தனர். அங்கு உள்ள 1,496 ஓட்டுகளைப் பதிவுசெய்ய, அதே பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைத்திருந்தனர். ஆனால் மாலை 5:00 மணிவரை ஒருவர் கூட ஓட்டு போடவில்லை. இருப்பினும், துணை கிராமமான துத்திப்பட்டில் வழக்கம்போல் வாக்குப் பதிவு நடந்தது.
இந்நிலையில், இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணித்தனர். விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் உள்ளது விற்பட்டு கிராமம். ஆவியூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த இந்தக் கிராமத்தை தனி பஞ்சாயத்தாக மாற்ற நீண்டகாலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அங்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், அதனை விற்பட்டு கிராம மக்கள் புறக்கணித்தனர். மேலும், அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றியும் எதிர்ப்பை தெரிவித்தனர். மக்கள் வாக்களிக்க செல்லாததால் அங்குள்ள வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் ஒதுக்கப்படுவதால் தனி ஊராட்சி கேட்பதாக விற்பட்டு கிராம மக்கள் கூறுகின்றனர். முன்னதாக கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், தேர்தல் முடிந்ததும் தனி ஊராட்சியாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.