மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பினர். ஆனால், தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகளோ அமைச்சர்களோ யாரும் பார்க்க வரவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை. மழையால் வாழ்வாதாரம் மொத்தமும் இழந்து சமைப்பதற்குக் கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுவதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீரென ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர், அனைவருக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என அப்பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறியதன் பிறகு மறியலை விலக்கிக்கொண்டனர்.