கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது முருகன்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் மணிமொழி. இவர் தனக்கு அரசு மூலம் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதற்கும் தன் குடும்பத்தினருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டும் இணைய வழி மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு முறைப்படி மனு செய்துள்ளார். இந்த மனு முருகன்குடி, துறையூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வரும் ஸ்ரீமுஷ்னம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்குச் சென்றது. அவர் மணிமொழியின் மனுக்களை அவருக்கு மேல் உள்ள வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்குச் செல்ல முடியாமல் மனுவை முடக்கி வைத்துள்ளார் என்று தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மனுதாரர் மணிமொழி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரை நேரில் சந்தித்து தனது மனுக்களை உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அப்போது சம்பத்குமார் அவரது மனுக்களை மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால் ரூ. 4500 லஞ்சமாகப் பணம் தர வேண்டும் அப்போதுதான் உங்கள் மனுவை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வேன் இல்லையென்றால் கிடப்பில் போடுவேன் என்று பேரம் பேசி உள்ளார்.
“நானே அரசிடமிருந்து முதியோர் உதவித்தொகை கேட்டு மனு செய்துள்ளேன். என்னிடம் போய் நீங்கள் லஞ்சம் கேட்கலாமா..” என்று சம்பத்குமாரிடம் மணிமொழி கேட்டுள்ளார். அப்போதும் கிராம நிர்வாக அலுவலர், “பணம் கொடுத்தால் வேலை நடக்கும்; இல்லையேல் இடத்தை காலி செய்..” என்று கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மணிமொழி இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புகாரை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், உண்மைத் தன்மையின் அடிப்படையில் மணிமொழியிடம் ரசாயனம் தடவிய ரூ. 4,500 பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரிடம் லஞ்சமாக கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி மணிமொழி சம்பத்குமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க, சம்பத்குமார் வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலரைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து சம்பத்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.