Skip to main content

விக்கிரமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை; மனைவி, மகன், மருமகள் கைது...

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
vikkiraangalam farmer saminathan

 

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (90). விவசாயியான இவர் தெற்கு தெருவில் உள்ள தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். சாமிநாதனுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி சிவபாக்கியம் இறந்துவிட்டார். தனலட்சுமி (65), தர்மராஜ் (60) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம் (70). இவருக்கு தங்கமணி (48) என்ற மகன் உள்ளார்.

 

சாமிநாதன் தனது சொத்துகளை இரு தாரங்களின் பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜ்-க்கும், இரண்டாவது மனைவியின் மகன் தங்கமணிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனது குடிசை வீட்டில் சாமிநாதன் தனியே தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுது, அரிவாளால் கழுத்து பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அப்பொழுது சாமிநாதன் இருக்கும் வீட்டிற்கு அருகே இருந்த சாமிநாதனின் முதல் மனைவியின் மகள் தனலட்சுமி எதார்த்தமாக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்பொழுது சாமிநாதன் வீடு திறந்து கிடந்ததாகவும் உடனே வீட்டிற்கு உள்ளே போய் பார்த்த பொழுது சாமிநாதன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததாகவும்  கூறப்படுகிறது.

 

பின்பு விக்கிரமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் சாமிநாதனின் இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கைதுசெய்து மூவரையும் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். சாமிநாதன் வெட்டப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்