Skip to main content

ஓசூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்; அதிரடி சோதனையில் 1.51 லட்சம் ரூபாய் பறிமுதல்!!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

vigilance officers raid at hosur rto office. then seizured the money

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய இருசக்கர, நான்கு வாகனங்கள் பதிவு செய்தல், இலகுரக, கனரக வாகனங்கள் பதிவு, ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் வழங்குதல், பெயர் மாற்றம் செய்தல், தகுதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. 

 

இங்கு ஆர்டிஓவாக ஈஸ்வரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்களாக தரணிதரன், விஜய்குமார் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

 

இந்த அலுவலகத்தில் வாகனங்கள் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு சேவைகளுக்கும் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும், லஞ்சம் கொடுத்தால்தான் அரசு சேவைகளையே செய்கின்றனர் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. 

 

அதிரடி சோதனை நடத்த காத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், நவ.25- ஆம் தேதி மாலையில் அந்த அலுவலகத்தில் திடீர் சோதனையில் இறங்கினர். 

 

டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன், ஆய்வாளர் முருகன், எஸ்ஐ ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் மஞ்சுநாத், பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், நரேஷ்குமார் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 09.00 மணி வரை இந்த சோதனை நடந்தது. அந்த அலுவலகத்தில் இருந்து ஆர்டிஓ உள்பட ஊழியர்களின் மேஜை டிராயரில் இருந்து கணக்கில் வராத 1.51 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் வழங்குதல், வாகனங்கள் புதுப்பித்தல், தகுதிச்சான்றிதழ் வழங்குதல் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக பட்டியல் போட்டு லஞ்சம் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. லஞ்சப்பணத்தில் யார் யாருக்கு பங்கு செல்கிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் வட்டார போக்குவரத்துத் துறை மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்