வேலூர் காகிதப்பட்டறை முனிசிபல் காலனி உழவர் சந்தை பின்புறம் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பறையை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் எனக்கூறப்படுகிறது. மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் இந்த பொது கழிப்பறை, தண்ணீர் மோட்டார் பழுது ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிறதாம். மோட்டார் பழுதாகி விட்டது என மாநகராட்சி அதிகாரிகளிடம் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர் புகார் கூறியுள்ளனர். அப்பகுதி மக்களும், கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை, அதனால் உடனடியாக மோட்டாரை பழுது பாருங்கள் எனச் சொல்லியுள்ளார்கள். மக்களின் புகாரையும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லையாம். இதனால் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்தி செல்லும் நிலையே உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் ஊழியரோ, தண்ணீரில்லை என இதனை மூடி வைக்கவும் முடியவில்லை. மூடி வைத்தால் ஏன் மூடி வைத்துள்ளீர் என கேள்வி கேட்பார்கள். கழிப்பிடத்தில் தண்ணீரில்லாத காரணத்தால் மக்கள் வீட்டில் இருந்தே பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் கழிப்பிடத்தை சுத்தம் செய்யத்தான் தண்ணீரில்லை. இதனால் அந்த பகுதியில் துறுநாற்றம் வீசுகிறது. இதனை அதிகாரிகளோ கண்டுக்கொள்வதில்லை என புலம்பி வருகின்றன அப்பகுதி மக்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி என்கிற திட்டத்தின் கீழ் வேலூர் மாநகரம் தேர்வு செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன, அதனை மாநகராட்சி தான் செலவிடுகின்றன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கக்கூஸ்க்கு கூட தண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலையிலும், மோட்டார் பழுது பார்க்க முடியாத நிலையில் நாற்றம் அடிக்கும் சிட்டியாக தான் வேலூர் மாநகராட்சி உள்ளது.