Skip to main content

பொதுமக்கள் ஆரவாரம் இல்லாமல் துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம்...

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

velankanni

 

கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி நுழைவுப் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பிரம்மாண்ட கட்டிடக்கலை அம்சத்துடன் விளங்கும் இந்த பேராலயத்திற்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலிருந்தும் திருவிழா காலங்களில் பொதுமக்கள் வருவார்கள். கரோனா ஊரடங்கால் சிலமாதங்களாகவே பேராலயம் மட்டுமின்றி வேளாங்கண்ணியே வெறிச்சோடியது.

 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பேராலய ஆண்டுத்திருவிழா 29-ம் தேதி துவங்கி 9-ம் தேதி முடிவடைவது வழக்கம், உலகம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று 29-ம் தேதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வழக்கம்போல் திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 

இதையடுத்து திருவிழாவில் பக்தர்கள் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

 

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பேராலய கொடியேற்றத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவலாம் எனவே வெளியிலிருந்து வந்தவர்களை அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள். விடுதிகளில் யாரையும் அனுமதிக்கக்கூடாது, பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக வேளாங்கண்ணிக்கு வருவதற்கான 8 நுழைவுப் பாதைகளில் ஆறுபாதைகளை நேற்று முதல் அடைக்கப்பட்டுவிட்டன. அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள இரண்டு பாதைகள் வழியாக உள்ளூர்வாசிகள் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர்வாசிகள் வெளியே சென்றுவர குடும்ப அட்டை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும். இந்த இரண்டு வழித்தடங்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

 

velankanni

 

 

இதற்கிடையில், "கொடியேற்றத்தை முன்னிட்டு வெளியிலிருந்து வந்து தங்குபவர்களுக்கு வீடுகளோ, விடுதிகளில் ரூம்களோ கொடுக்ககூடாது. அப்படி வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கியிருப்பது தெரியவந்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், சம்பந்தப்பட்ட விடுதிக்கும் வீட்டுக்கும் சீல் வைக்கப்படும்," என்று கூறியுள்ளார் மாவட்ட எஸ்.பி.

 

கொடியேற்றம் நடப்பது உறுதி, பாதிரியார்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்து கொண்டு கொடியேற்றம் நடக்கும் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்