Skip to main content

இறுதிப்போரில் தமிழர்களைக் கொன்று குவித்தவர் புதிய இராணுவத் தளபதியா? கி.வீரமணி கண்டனம்

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: இலங்கையின் 23 ஆம் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா யார்? இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறீசேனா இவரைத் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திருப்பது - அவரின் ஈழத் தமிழர்கள்மீதான வெறுப்புக்கான அடையாளமே!

 

k

 

யாரிந்த புதிய இராணுவத் தளபதி? தமிழீழப் புலிகளுடன் போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இறுதி கட்ட போரின்போது 58 ஆம் படைப் பிரிவின் தலைவராக இருந்தவர்தான் இந்த ஷவேந்திர சில்வா. இவர்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன? போரின்போது சரணடைந்தவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற சர்வதேச நெறிமுறைகளை எல்லாம் குப்பைக் காகிதமாகக் கசக்கி எறிந்து, அவர்களை சித்திரவதை செய்து கொன்ற கொடூரன்தான் இந்தப் புதிய படைத் தளபதி. அமெரிக்க நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவை!

 

இந்தப் பதவிக்குத் தகுதியே அதுதான் என்று இலங்கை ஜனாதிபதி நினைத்துள்ளார் போலும்! சரணடைந்தவர்களை சித்திரவதை செய்தார் என்ற குற்றஞ் சுமத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதி கட்டப் போரில் இவர் நடந்துகொண்ட அத்துமீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்தும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்றும் அய்க்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

 

இலங்கைத் தீவிலும் கடும் எதிர்ப்பு! இந்த நியமனத்துக்கு இலங்கைத் தீவில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. போர்க் குற்றவாளி என்று கருதத் தக்க ஒருவரை இராணுவத் தளபதியாக நியமனம் செய்திருப்பது தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சார்பிலும் இந்த நியமனம் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னெஸ்ட்டி இன்டர்நேசனலும் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. போர்க் குற்ற விசாரணை என்னாயிற்று? இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகள்பற்றிய விசாரணையின் முடிவு என்ன? அந்தக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பதெல்லாம் இப்பொழுது பேசப்படாத பொருளாகி விட்டது. காரணம் காலம் கடந்து மக்களின் நினைவுத் திரையிலிருந்து காணாமலேயே போய்விட்டது.

 

கோத்தபய ராஜபக்சே முப்படைத் தளபதி - ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியா? இனப்படுகொலையாளி கோத்தபய ராஜபக்சே அடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவிருப்பதாகக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில், இராணுவத் தளபதியாக அந்த இனப்படுகொலையின் தளகர்த்தராக இருந்தவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது மீதமிருக்கிற தமிழர்களையும் துடைத்தெறிவதற்கான திட்டமா என்று கருத வேண்டியுள்ளது.

 

இலங்கை மீதான போர்க் குற்றம் தொடர்பான விசாரணை என்னவாயிற்று? போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்? நீதி கிடைப்பதில் உள்ள தாமதம், நீதி மறுக்கப்படுவதற்குச் சமம் என்ற தத்துவத்திற்கு ஈழத் தமிழர் படுகொலையில் காட்டப்படும் மெத்தனமே தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். இலங்கை அரசில் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டும்தானா? அந்த வகையில் தமிழர்களுக்கு விரோதிகள் என்று அரசே முடிவெடுத்து செயல்படுகிறது என்று பொருளாகும். இந்த நியமனம் ரத்து செய்யப்படவேண்டும் என்பது உலகளாவிய மனிதநேயர்களின் எதிர்பார்ப்பாகும்.

சார்ந்த செய்திகள்