Skip to main content

சனாதன எதிர்ப்புப் போராளி அண்ணாவின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வோம்!திருமாவளவன்

Published on 03/02/2019 | Edited on 03/02/2019
thi

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு:   ’’பேரறிஞர் அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அவரது 50வது நினைவு நாளில் சனாதன எதிர்ப்புப் போராளியான அவருடைய கருத்துக்களை  முன்னெடுத்துச் செல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உறுதி ஏற்கிறோம். 

 

தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் முதன்மையான மாணாக்கராகத் திகழ்ந்து; வைதீகத்தை, வருணக் கொள்கையை, சனாதனத்தை எதிர்த்து சமராடிய மாபெரும் போராளி பேரறிஞர் அண்ணா ஆவார். இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைப்  பயன்படுத்தி சமூகநீதியை செயல்படுத்திக் காட்ட முடியும் என்பதற்கு அவரே முன்னுதாரணம் ஆவார். 

 

தமிழ் மொழிக்காக , இனத்துக்காக, தாம் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைக் கொள்கைக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். சனாதன மீட்புக்கனவில் மண்ணை அள்ளிப் போடும் மாநிலமாகத்  தமிழ்நாடு இன்றும் திகழ்கிறது என்றால் அதற்கு பேரறிஞர் அண்ணா ஏற்றிய இனமான கொள்கைச் சுடரே காரணம்.

 

சமூகநீதிக்கு எதிரான, சாதிய ஏற்றத்தாழ்வுகளை நிலைநாட்ட விரும்புகிற, சனாதன சக்திகளின் கையில் ஆட்சி அதிகாரம் இப்போது உள்ளது. அவர்கள் இந்த நாட்டைப் பின்  நோக்கி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். மனிதர்களை விட மாடுகளே முக்கியம் என்று அவர்கள் கருதுவதால் தான் இந்த நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பென்ஷன்  திட்டத்துக்காக 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய அவர்கள், பசு பாதுகாப்புக்காக 750 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். 

 

அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளைப்  பரப்புவதிலும், சமூகத்தில் வன்முறையை ஏவுவதிலும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக சாமியார்களை முன்னிறுத்துவதிலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள்.  இந்த சனாதன பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க கருத்தியல் களத்தில் நமக்கு இன்று மிகவும் பயன்படக்கூடியவை பேரறிஞர் அண்ணாவின் கருத்துகளாகும். 

 

சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்த சமூக நீதிப் போராட்டத்தில்  என்றென்றும் பயன்படக்கூடிய கருத்தியல் ஆயுதங்களை வழங்கிச்  சென்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது நினைவுநாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு வீர வணக்கங்களைச்  செலுத்துகிறோம்.  அவர் காட்டிய உறுதியோடு சனாதன எதிர்ப்புப்  போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என உறுதி ஏற்கிறோம்.’’ 

 

சார்ந்த செய்திகள்