வி.வி. மினரல் குழுமத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மத்திய புலனாய்வுதுறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 25ம் தேதி காலை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வந்தனர்.
5வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் தொடர்புடைய வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய புலனாய்வு துறையினர் வைகுண்டராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. வைகுண்டராஜன் கைது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.