கரோனா நோய் பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி ஊர் சுற்றுகிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட காவல்துறை பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக விழுப்புரம் மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகனத் தணிக்கையை போலீஸார் நடத்தி வருகிறார்கள்.
கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் யாரும் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்பதால், தடையை மீறி வருபவர்கள் மீது காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று தேவையில்லாமல் வாகனங்களில் வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதுமட்டும் தீர்வாகாது என்று கருதி, வாகன சோதனை நடைபெறும் இடங்களில் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினரை வரவழைத்தனர்.
அவர்களை அங்கே அமரவைத்து ஊர்சுற்றும் வாகன ஓட்டிகளை மடக்கி சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்து, அவர்களுக்குத் தடுப்பூசி போட்டு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனர். ஊரடங்கின் போது ஊர்சுற்றி வந்தவர்களுக்கு காவல்துறையினர் தடுப்பூசி போட்டு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீஸார் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த நபர்களைச் சுகாதாரத் துறையினரிடம் கொண்டு வந்து அமர வைத்து தடுப்பூசி போட்டு அனுப்பி வைத்தனர். தடுப்பூசி போடுவதற்கான ஒரு புதிய இடமாக தற்போது மாறியுள்ளது போலீஸாரின் வாகன சோதனை மையங்கள்.