கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மேல்பவி, நீலம்பதி, ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான இங்கு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், ஆதிமாதையனூர் கிராமத்தினைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் பசுமாடுகள் வளர்த்துவருகிறார். நேற்று (31.10.2021) இரவு இவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று, அவர் வளர்த்துவந்த பத்து மாத கன்றுக்குட்டியைத் தூக்கிச் சென்றுள்ளது. கன்றின் அலறல் சப்தம் கேட்ட கிராம மக்கள் சிலர், சிறுத்தையைத் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற அந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் போய்விட்டது.
இதையறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து அதன் கால்தடங்களை ஆய்வுசெய்துவருகிறார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையை வனத்துறை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.