தி.மு.க வரலாற்றிலேயே திண்டுக்கல் மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளை ஆளுங்கட்சி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. அந்த அளவுக்கு நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் திண்டுக்கல் மாநகராட் சியி ல் உள்ள நாற்பத்தி எட்டு வார்டுகளில் 30 வார்டுகளை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. அதுபோல் கூட்டணிக் கட்சிகளும் 7 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் திமுக கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றது அதேபோல் வெற்றி பெற்ற 5 சுயேச்சைகளும் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து ஐ.பி.முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். அதன்மூலம் 42 வார்டுகளை ஆளுங்கட்சி தக்க வைத்திருக்கிறது. மீதமுள்ள 6 வார்டுகளில் 5 வார்டுகளை எதிர்க்கட்சியான அதிமுகவும் ஒரு வார்டை பி.ஜே.பி.யும் கைப்பற்றியுள்ளது.
அந்த அளவுக்கு அதிக பெரும்பான்மையான பலத்துடன் திமுக கூட்டணி இருக்கிறது. அதுலேயும் பெரும்பான்மையான வார்டுகளில் அதிமுக டெபாசிட் பறிபோய் இருந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த மாநகராட்சியை பெண் மேயருக்கு ஒதுக்கி இருப்பதால் திமுக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற 20 பெண் கவுன்சிலர்களில் 6-வது வார்டு சரண்யா, 3-வது வார்டு இந்திராணி, 9-வது வார்டு சாந்தி, 30-வது வார்டு, லட்சுமி,19-வது வார்டு ஆரோக்கிய செல்வி, 43-வது வார்டு விஜயா, 37-வது வார்டு நித்தியா, 20-வது வார்டு ஜெயந்தி, 5-வது வார்டு சுவாதி, 23-வது வார்டு இளமதி உள்பட 10 பெண் கவுன்சிலர்கள் மேயர் பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்கள். ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சிக்காக உழைத்தவர்கள் தான் பதவிகளும் கொடுக் கப்படும் என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து கட்சிக்காக உழைத்தவர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். அதோடு சில கவுன்சிலர்கள் பண பலத்துடனும் மோதி வருகிறார்கள் இருந்தாலும் அமைச்சர் ஐ.பெரியசாமி யாருக்கு வரம் கொடுக்கிறாரோ? அவர்தான் முதல் பெண் மேயராக வரமுடியும். அதனால சில பெண் கவுன்சிலர்களின் கணவர்களும் உறவினர்களும் பண பலத்துடன் மேல்மட்டம் வரை மோதி அமைச்சர் ஐ.பி. ஆசியைப் பெற நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆறாவது வார்டு வெற்றி பெற்ற சரண்யாவின் மாமனார் சந்திரசேகர் ஏற்கனவே யூனியன் சேர்மனாக இருந்தவர். கடந்த எம்.பி. எம்எல்ஏ தேர்தலின் போது சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை, அதன்பின் மேயர் தேர்தலில் யாவது சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் பெண் மேயர் என்பதால் தனது மருமகளை களத்தில் இறங்கி வெற்றி பெற வைத்தவர், பெண் மேயர் பதவி பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அது போல் முன்னாள் யூனியன் சேர்மன் பெருமாள் சாமியும் தனது மனைவி சாந்திக்கு மேயர் பதவி போட்டி போட்டு வருகிறார். அதுபோல் 3-வது வார்டு வெற்றி பெற்ற இந்திராணிக்கு தலைமை வரை செல்வாக்கு இருப்பதாகவும் தெரிகிறது. அதுபோல் லட்சுமி, நித்தியா, ஜெயந்தி, ஆரோக்கிய செல்வியின் உறவினர்களும் சீட்டுக்காக மோதி வருகிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும் போது கடும் போட்டிகளுக்கு இடையே சரண்யா அல்லது இந்திராணி ஆகிய இருவரில் ஒருவர் மேயர் சீட்டில் உட்கார வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் அமைச்சர் பெரியசாமியின் கண்பார்வை யார் பக்கம் திரும்புதோ அந்த பெண் கவுன்சிலர் தான் மேயர் சிம்மாசனத்தையும் அலங்கரிக்க முடியும்.