சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. இளைஞரணியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வினோதமானது; இந்த இரு கட்சிகளும் மக்களுக்கு பாரமாக உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைக் கொடுக்க முடியும். வாஜ்பாய் தலைமையில் முதலில் ஆட்சி அமைத்தபோது ஆதரித்த ஜெயலலிதாவை ஒருபோதும் பா.ஜ.க. மறக்காது. உலகின் மிகப்பழமையான மொழியான, அனைத்து மொழிகளுக்கும் தாயாக உள்ள தமிழை நேசிக்கிறேன். தமிழ் முனிவர்கள் பிறந்த மண்ணை மிகவும் நேசிக்கிறேன். சேலத்தில் மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு போல மோடி இட்லி பிரசித்திப் பெற்று வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திச் செய்யப்படும்.
'ஜல்ஜீவன்' திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. நாட்டினை நிர்மாணிப்பதற்காக பா.ஜ.க. அரசியல் நடத்துகிறது. கரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்துக் கொண்டிருக்கிறது; பங்குச்சந்தையும் வேகமாக வளர்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. சேலம்- சென்னை விரைவு சாலைத் திட்டப்பணிகள் 2021- 2022 ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான இரண்டு ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம். சீனாவுடன் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், பா.ஜ.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.