தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகளவில் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மாவட்டங்கள்தோறும் தனித்தனியே அம்மாவட்டங்கள் தரப்பிலிருந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி திருச்சியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த டிச.31ஆம் தேதி மாலை முதல் ஜன.1ஆம் தேதி அதிகாலை வரை மாநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,767 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் 182 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 37 பேர் மீதும், மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக பலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்படி மொத்தமாக 2,950 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.