கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல இடங்களில் மழைபொழிந்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தொடர் கனமழையால் நீர் தேங்கியதால் பேருந்து ஒன்று மழைநீரில் சிக்கியது. கோவையில் கடந்த இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பொழிந்துவரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. தொடர் மழையால் அந்த பாலத்தின் கீழ் அதிக வெள்ளநீர் சூழ்ந்தது. ஆனால் இதை பொறுப்படுத்தாமல் அலட்சியமாக தனியார் பேருந்து ஒன்று டவுன் ஹால் நோக்கிச் சென்ற நிலையில், பாலத்தின் அடியில் உள்ள வெள்ள நீரில் சிக்கி நின்றது. தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் உடனே பத்திரமாக இறங்கி வெளியேறினர்.