கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் நாளை (07.09.2021) தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, ‘திட்டக்குடி நகரம், மங்களூர் கிழக்கு ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு, சார்பு நீதிமன்றம் மற்றும் கருவூலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் வழியின் முன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த அசுத்த நீரால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களுக்கு பொதுமக்களும், அலுவலக பணிக்காக வரும் ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு சீர்செய்ய வலியுறுத்தியபோது பேரூராட்சி நிர்வாகம், நாங்கள் பராமரிப்பு மட்டும்தான் எனவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடம் பேரூராட்சி நிர்வாகத்திடம் உள்ளது எனவும் முன்னுக்குப் பின் மாறி மாறி தகவல் கொடுப்பதால், ஒரே இடத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நாளை காலை 10 மணிக்கு மேல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்பட காரணமாக உள்ள இடத்தின் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. கரோனா காலகட்டம் என்பதால் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்ளுதல் வேண்டும்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.