நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஜெயலலிதாவை அவமதிப்பது போல் பேசியது வருத்தம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,
நாஞ்சில் சம்பத் எங்களுக்காக பல மேடைகளில் ஆதரவாக பேசி இருக்கிறார். பெயர் காரணம் சொல்லி அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அண்ணாவையும், திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது போல் பேசி இருக்கிறார்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக திகழ்கின்ற அம்மாவின் பெயரில் இந்த கட்சியை தொடங்கி இருக்கிறோம்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அம்மாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்துள்ளார். திராவிட மக்களின் பாதுகாவலராக விளங்கிய அம்மாவின் திருப்பெயரில் இந்த இயக்கம் இயங்கும்.
அவர் என்னை விட வயதில் மூத்தவர் அவர் அண்ணாவை பார்த்திருக்கலாம், பெரியாரை பார்த்திருக்கலாம். அதன் பிறகு தி.மு.க.வில் இருந்தார். ம.தி.மு.க.வில் இருந்தார். அதன் பிறகு அம்மாவிடம் வந்தார்.
நான் ஏதோ பச்சை படுகொலை செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் நன்றாக பேசுபவர். அவர் அம்மாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அம்மாவை அவமதிப்பது போல் பேசியது வருத்தம் அளிக்கிறது.
எங்களை பொருத்தவரை இது ஒரு இடைக்கால ஏற்பாடு. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் 3 பெயர்களை கொடுத்திருந்தோம். அதில் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற பெயரெல்லாம் கொடுத்திருந்தேன். அது அவருக்கு தெரிந்திருக்கும். அதை தெரியாதது போல் மறைத்துக் கொள்கிறார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிட்ட டெல்லி வக்கீல், இந்த பெயர்கள் எல்லாம் பதிவாகி இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூறியுள்ளார்.
இப்போது கொடிக்கு பிரச்சினை செய்கிறார்கள். கொடியின் நடுவில் வெள்ளை வரக்கூடாது என்று அவர்கள் காப்புரிமை எதுவும் வாங்கவில்லை. அம்மாவின் படத்துடன் 50 சதவீதம் வெள்ளை, 25 சதவீதம் சிவப்பு, 25 சதவீதம் கருப்பு வைத்துள்ளோம்.
அ.தி.மு.க. கொடியில் 50 சதவீதம் கருப்பு, 50 சதவீதம் வெள்ளை நடுவில் அண்ணா படம் உள்ளது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வின் கொடியான அதே கருப்பு சிவப்பைத்தான் வைத்திருந்து நடுவில் அண்ணா படத்தை வைத்தார். அதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பெரியார் ஆட்சி அதிகாரத்துக்கு போகக் கூடாது என்று தான் சொன்னார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று அண்ணா வெளியில் வரும்போது தி.க. கொடியில் உள்ள கருப்பு கலரை எடுத்து தான் கொடி உருவாக்கினார். அதை யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் கொடியில் அம்மா படம் இருக்கிறது. என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்கிறோம்.
இரட்டை இலையையும், கட்சியையும் மீட்டெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். இப்போது நானாக கட்சி ஆரம்பித்தால் பொதுச்செயலாளரும் அதில் இருக்க முடியாது. 18 எம்.எல்.ஏ.க்களும் அதில் இருக்க முடியாத நிலை வரும். நானும் அந்த வழக்கை நடத்துவதற்கான உரிமையை இழந்து விடுவேன். எனது உறுப்பினர் அட்டை காலாவதியாகி விடும் என்பதால் கோர்ட்டில் போய் அனுமதி வாங்கி கட்சி தொடங்கினேன். எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு தான் இந்த பெயரை யோசித்து அறிவித்தேன். இதை ரகசியமாகவே செய்தேன். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். நாங்கள் அம்மாவை பார்த்துதான் அரசியலுக்கு வந்தோம். அம்மாவின் அறிமுகத்தால் புரட்சிதலைவரை ஓரிரு முறை பார்த்துள்ளோம். இங்கு இருக்கும் 90 சதவீத தொண்டர்கள் அம்மாவால் களத்துக்கு வந்தவர்கள்தான். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினால் அவரை கட்சியில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும். எங்கள் கட்சிக்கு வருவோரை வரவேற்க எங்கள் கட்சி கதவு திறந்தே இருக்கின்றன. இவ்வாறு கூறினார்.