அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இவர்கள் 3 பேருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்காத பட்சத்தில், கொறடா ராஜேந்திரன் மூலம் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ப.தனபாலிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில், 3 பேரிடம் அவரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார். அதற்கும் அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களை போல் இவர்களும் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.
எனவே, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேர் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரியவரும்.
தற்போது, 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டதால், தங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று இவர்கள் 3 பேரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரிடம் நாங்க சொல்றத கேளுங்க, நல்லா இருங்க என நாங்க சொன்னதாக சொல்லுங்க என மூத்த நிர்வாகிகளை பேச சொல்லியிருக்கின்றனர் ஓ.பி.எஸூம், இ.பி.எஸூம். அதன்படி இவர்கள் 3 பேரையும் தொடர்பு கொண்ட மூத்த நிர்வாகிகள், சீக்கிரம் முடிவெடுத்து பதவியை காப்பாற்றிக்கொள்ள இந்தப்பக்கம் வாருங்கள் என்று கூறியுள்ளனர்.
தினகரன் குழுவினரோ இவர்களை சமாதானப்படுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் நம்பிக்கையுடன் இருங்கள் என்று பேசி வருகின்றனர்.