காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாக ஒரு பக்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து அந்த பகுதி விவசாயிகளை போராட வைத்த மத்திய, மாநில அரசுகள் அதேபோல விளை நிலங்களை அழித்து எரிவாயு குழாய் புதைப்பதையும் செய்து கொண்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் எந்த பணிகளையும் செய்ய முடியாமல் போராட்டமே வாழ்க்கை என்று வயல்களிலும், சாலைகளிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி அருகே திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், அயோத்திபட்டி - அய்யாசாமிபட்டி இடையே விவசாய நிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் பணிக்காக, ஏராளமான குழாய்கள், செவ்வாய்க்கிழமை இரவில் லாரிகள் மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் சி.பாஸ்கர், மற்றும் நிர்வாகிகள் தமிழரசன், மருதமுத்து, வியாகுலதாஸ், பாலசுப்பிரமணியன், சுபாஷ் சந்திர போஸ், தங்கமணி, தங்கவேலு, மாதர் சங்க நிர்வாகிகள் மலர்கொடி, வாலிபர் சங்க நிர்வாகிகள் கரிகாலன், தமிழ்செல்வன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
"தண்ணீரை உறிஞ்சுறியா... விவசாயிகள் ரத்தத்தை உறிஞ்சுறியா... .ஓ.என்.சி யே.... வேதாந்தா நிறுவனமே வெளியேறு... ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் திட்டம், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் முயற்சியை அரசே கைவிடு" என முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குழாய்களை இறக்க வந்த லாரியையும் திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,"இறக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதாக" தெரிவித்தனர். "இரண்டு நாட்களில் அப்புறப்படுத்தப்படவில்லை என்றால், விவசாயிகளே அப்புறப்படுத்துவோம்" எனத் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகள் சிலர் இது கொள்ளிடம் குடிதண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கப்படுவதாக முதலில் பொதுமக்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விவசாய சங்கம் போராட்டக் களம் என்றதும் அந்த அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர்.
இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் கூறியதாவது," விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, "இத்திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது" என உறுதி அளித்தார். ஆனால் அவரது பெயரில் ஆட்சி நடத்தும் இந்த எடப்பாடி அரசு பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பை மீறி நாசகார திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில், 11 வட்டங்களில் 75 கிராமங்களில், திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி, தஞ்சையில் அய்யாசாமிப்பட்டி, மருதக்குடி, முத்தாண்டிபட்டி, புதுப்பட்டி, கொட்டரப்பட்டி, நவலூர் வழியாக திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை வரை, விவசாய நிலங்களின் கீழே எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்கள், விவசாயிகள் எதிர்ப்பால் கடந்த 2012-13 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இப்போது மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பொதுமக்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒத்த கருத்துடைய அமைப்புகள் இணைந்து அரசின் இத்திட்டத்தை முறியடிப்போம். விவசாய நிலங்களை மலடாக்கும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்றார்.