Skip to main content

மாணவர்களின் தனித்திறன்; உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் பள்ளி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Trichy private school is set to create a world record

 

திருச்சி காஜாமலை தர்கா ரோடு பகுதியில் உள்ளது அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 300க்கும் அதிகமான அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

 

கடந்த 30 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வரும் இப்பள்ளி, கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் தனித் திறமைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவதால் மாவட்டம், மாநிலம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பல வெற்றிக் கோப்பைகளை பெற்றுள்ளது. தற்போது பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டினை கொண்டாடும் விதமாக ஒரு குழுவினரால் காகிதக் கோப்பைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி (The Largest National Flag Made with paper cups by a Team ) எனும் உலக சாதனையை படைக்க உள்ளது. 

 

இந்த சாதனை நிகழ்வு குறித்து பள்ளியின் தாளாளர் முகமது ஆரிஃப், செயலாளர் அகமதுல்லாஹ், முதல்வர் கமர்த்தாஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியபொழுது: "மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை நிரூபிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 320 மாணவ மாணவிகள் மற்றும் 22 ஆசிரியர்கள் கொண்ட குழு பங்கேற்கிறது. சனிக்கிழமை அன்று சுமார் 85 ஆயிரம் காகிதக் கோப்பைகளில் மூவர்ண வர்ணம் பூசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் தேசியக்கொடி வடிவில் காட்சிப்படுத்த உள்ளோம். இதை ஒரு தேசியக் கடமையாக நினைத்து செய்கிறோம்.

 

இந்த மாபெரும் உலக சாதனையை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய இரண்டு உலக சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரில் கலந்து கொண்டு ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க உள்ளனர். இம்முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று பிரம்மாண்ட உலக சாதனை படைக்கும் தமிழ்நாட்டின் முதல் பள்ளி என்ற பெருமையை திருச்சி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி பெரும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் இந்த சாதனை நிகழ்ச்சிக்காக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். இந்த சந்திப்பின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஸ்பின் ஸ்டெல்லா, பரண்யா, ஜபீன் மற்றும் பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்