தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (25 பிப்.) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று சென்னையில் அறிவித்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுக்க காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி, கரூர் மண்டலத்தில் 20 பணிமனைகள் உள்ளன. தினமும் 1,176 பேருந்துகள் இயங்கக் கூடிய நிலையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 20 பணிமனைகளையும் சேர்த்து 120 பஸ்கள் மட்டுமே ஓடத் துவங்கியுள்ளன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே பேருந்தை இயக்குகின்றனர். அவர்கள் அனைவரும் இதுநாள்வரை ஓ.டி. டூட்டியில் இருந்ததால், தற்போது அவர்கள் மட்டுமே பேருந்தை இயக்குகிறார்கள். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.