திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (27.02.2023) மாலை சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் காத்திருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு ஆண் பயணி கையில் கொண்டு சென்ற கைப்பையில் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 24 லட்சத்து 57 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பெண் பயணி கொண்டு சென்ற கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.