Skip to main content

குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

குழந்தை விற்பனை என்பது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குழந்தை விற்பனையில் புரோக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர் முறையாக குழந்தையை தத்தெடுக்க தெரியாமல் திருட்டுத்தனமாக இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து, குழந்தையை தத்தெடுத்து சர்ச்சையில் சிக்கி சிறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.

trichy childrens program police speech

இந்த நிலையில் திருச்சியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மோகன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "குழந்தையை தத்தெடுத்து வளர்க்க சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைப்படி தான் குழந்தைகள் தத்தெடுக்க வேண்டும். இதற்கு மாறாக குழந்தைகளை விலைகொடுத்து வாங்கி வளர்ப்பது சட்டவிரோதமானது.
 

சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க வழிமுறைகள் மிக எளிமையானதாகும். ஆனால் அதிக செலவாகும் என மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது. குறிப்பிட்ட அந்த தொகையை மீறி அதிக தொகையை எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனையும் மீறி அந்த முகமையில் கூடுதல் தொகை கேட்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். குழந்தையை தத்தெடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 முகமைகள் உள்ளன. அவற்றில் உள்ள குழந்தைகளை பெற விண்ணப்பித்துத் தத்தெடுக்கலாம். குழந்தை தத்தெடுக்கும் நபர் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை அதில் பதிவிட வேண்டும்.
 

ஒரு குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பக் கட்டணம் உட்பட மொத்த செலவு 46 ஆயிரம் ஆகும். சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க 10 மாத கால அவகாசம் ஆகும். குழந்தையின் விருப்பமும் இதில் முக்கியமாகும். தடுப்பவர்களை பிடித்திருக்கிறதா? என அந்த குழந்தையிடம் கேட்கப்பட்டு அதற்கு அந்த குழந்தை சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படும்.
 

குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட முடியாது தத்து கொடுக்கப்பட்ட பின்பும் அந்த குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டும். இந்த வழிமுறைகள் எதுவும் தெரியாமல் குழந்தை தத்தெடுக்கும் பலர் ஒரு லட்ச ரூபாய் , இரண்டு லட்ச ரூபாய் என கொடுத்து வாங்குவது சட்டப்படி குற்றமாகும்." என்றார்.
 

இதையடுத்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், "சமீபத்தில் திருவரம்பூர் பகுதியில் குழந்தை விற்பனை நடைபெற்றது மிகவும் துரதிஷ்டவசமானது. அந்த தம்பதியினரும் எதுவும் தெரியாமல் வெகுளியாக இருந்துவிட்டனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் தத்து எடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
 

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு தலைவர் கமலா, உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கீதா, கூடுதல் போலீஸ் டிஎஸ்பி குணசேகரன், குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜிம், மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துக் கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்