ஸ்ரீவில்லிபுத்தூர் – கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டார் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இந்தியா சார்பில் 2008-ல் அனுப்பப்பட்ட சந்திராயன் நிலவில் நீர் உள்ளது என்பதைக் கண்டறிந்தது. அதுவே, உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் நிலவுக்குச் செல்ல வேண்டும் என்றொரு முடிவை எடுப்பதற்கு உந்துசக்தியாக இருந்தது. ஜூலை 22-ஆம் தேதி ஏவப்பட இருக்கும் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இயற்கை விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்குத் துணைபுரியும். இதன்மூலம், விண்வெளி சுற்றுலா என்பதையும் தாண்டி, நிலவுக்குச் சுற்றுலா செல்வதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் இறங்கிய அதே தென் துருவத்தில், இதுவரை யாருமே இறங்காத சவாலான இடத்தில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது சந்திராயன் 2 விண்கலம் இறங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது மிக முக்கியமான தருணம். அதனால், 70-க்கும் மேற்பட்ட சிறிய நாடுகள், தாங்களும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துலுக்கு உட்படும். மேலும், இந்திய வான்வெளி ஆராய்ச்சி தவிர, தனியாரும் வான்வெளி ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்வரும் காலங்களில், இந்திய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நடந்தால், அவர்களும் பெரிய விண்வெளி விஞ்ஞானிகளாக வரமுடியும்.” என்றார் உறுதியான குரலில்!