தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் கடந்த 22 ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார்.
வாகை மலர் நடுவே அமைந்திருக்க இருபுறமும் யானைகள் சீறிப்பாயும் வகையில் கொடி அமைக்கப்பட்டு இருந்தது. கொடிக்கான விளக்கம் குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில் தெளிவுபடுத்த இருப்பதாகவும் அதுவரை தன்னுடைய கட்சியினர் கொடியை ஏற்றி வைத்து கொண்டாடுமாறு தெரிவித்திருந்தார். அதேநேரம் கொடியை ஏற்றுவதற்கான முறையான அனுமதி மற்றும் நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் 234 தொகுதிகளிலும் இன்று கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்றி வருகின்றனர். சில இடங்களில் கட்சியினர் அனுமதி இல்லாமல் கொடியேற்றியதாக போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை புதுப்பேட்டை பகுதியில் தடையை மீறி கொடி ஏற்றியதாக புகார் எழுத நிலையில் அங்கு வந்த போலீசாரிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'அனுமதி இன்றி எங்கும் கொடி கம்பங்கள் வைக்கக்கூடாது. முறையான அனுமதி பெற்றே கொடியை ஏற்ற வேண்டும்' என தொண்டர்களுக்கு தலைமை எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.