திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெரம்பூரில் இருந்து இரவு 07.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன.
இந்த விபத்தில் பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புக்குழுவினர் ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேசமயம் கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பயணிகள் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளன.