பள்ளி மாணவியை காதலிப்பது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவும் எடுத்து தங்களின் இச்சைக்கு அடுத்தடுத்து இணங்க வேண்டுமென சித்திரவதை செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மகன் சந்தோஷ். 25 வயதான இவன் சென்னையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தான், அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கு மாணவி ஒருவரை காதலிப்பதாக நடித்து அவருடன் நெருங்கி பழகியிருக்கிறார்.
அந்த மாணவியின் தந்தை உடல் நலம் குன்றியவராக இருந்ததால் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அடிக்கடி வெளியூர் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்துவந்ததும், அந்த சமயத்தில் மாணவி தனியாக இருப்பதையும் சாதகமாக்கிக்கொண்ட சந்தோஷ் அடிக்கடி அந்த மாணவி வீட்டுக்கு செல்வதும், ஆசை வார்த்தை கூறி பாலியல் வண்புணர்வில் ஈடுபடவைப்பதும் வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார். சுமார் ஓராண்டாக வீட்டில் பெற்றோர்கள் இல்லாததை சாதகமாக்கிக்கொண்டு நெருக்கமாக இருந்ததோடு, அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டு, அந்த வீடியோவை தனது நண்பர் அக்கலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவனுக்கு அனுப்பியிருக்கிறான்.
இந்த வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட கண்ணன். அந்த வீடியோவை எடுத்துக்கொண்டு வீட்டு உபயோகப் பொருள் விற்க செல்பவர்களைப்போல அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று, தனியாக இருந்த சிறுமியிடம் அந்த வீடியோக்களைக் காட்டி என்னோடு இணங்கிவரனும் இல்லன்னா உலகமே பார்க்கும்படி செய்துவிடுவேன் எனகூறி மிரட்டி இருக்கிறான். அதற்கு அந்த சிறுமி மறுத்திருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த 23 ம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு போதையோடு பட்டப்பகலில் வீடு புகுந்த கண்ணன், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். நடுங்கிபோன சிறுமியோ கத்திக் கூச்சல் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பித்திருக்கிறான். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மயிலாடுதுறை மகளிர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முப்பத்தி ஐந்து வயதான கண்ணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சந்தோஷ்குமாருக்கு வயது குறைவு என்றாலும் தவறானவர்களின் தொடர்புகளோ அதிகம். என்கிறார்கள் அந்த தெருவாசிகள்.
"நாகை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான போக்சோ சட்டம் பதிவாகியிருப்பது," வேதனை அளிக்கிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.
"பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்து அதை வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் மீண்டும் அடித்தும் சித்திரவதை செய்தும், பணம் பறித்த சம்பவம் நாட்டையே நடுங்கவைத்தது. அந்த குற்றத்திற்கு பின்னால் ஆளுங்கட்சி பிரமுகரின் வாரிசுகள் இருந்ததால் அந்த வழக்கு கானல் நீராகவே போய்விட்டது. அந்த விவகாரத்தில் கடுமையான தண்டனை கிடைத்திருந்தால் இதுபோன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருந்திருக்காது, அச்சம் கூடியிருக்கும் இதுபொல் சிறுமிகளிடம் கைவரிசை காட்ட தயங்கியிருப்பார்கள், அதில் காட்டிய அலட்சிய வழி இதுபோன்ற குற்றங்களை செய்ய இளைஞர்களை தூண்டுகிறது," என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.