விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - வந்தவாசி இடையில் உள்ள பெரப்பேரி கிராமத்தில் ஓடை தூர்வாரும் பணி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடந்துவருகிறது. இதில், ஓடைப் பகுதியில் இருந்த கற்களை சிலர் அப்புறப்படுத்தினர். அந்த கற்களுக்கு இடையே கருங் குளவிகள் பெரிய கூடு ஒன்று கட்டியிருந்தது. தொழிலாளர்கள் அதை கவனிக்காமல் கற்களை அகற்றியபோது, அதிலிருந்த குளவிகள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியுள்ளது.
இதில் 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கு முகம், கை போன்ற இடங்களில் வீக்கம் கடும் வலி ஏற்பட்டு துடித்தனர். உடனடியாக வேலையின் களப்பணியாளர் நளினி, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் துணைத் தலைவர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் நேரில் வந்து பணியாளர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.