தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின் படி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 06.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும், அதனைத் தொடர்ந்து 07.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகலில் 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், ‘ஜனவரி 7ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (B.T / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்கு (04.02.2024) ஒத்தி வைக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.