கடந்த ஜனவரியின் போது டி.என்.பி.எஸ்..சி. குரூ-4 முறைகேடு வெளிவரத் தொடங்கியதுமே அது ராமநாதபுரம், மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் அங்கு 39 பேர் முதலிடத்தில் தேர்வானது சந்தேகத்தைக் கிளப்பியது. அதன் தொடர் விசாரணையில் முதன் முதலாக நெல்லை மாவட்டத்தின் கூடன்குளம் சமீபம் உள்ள விஜயாபதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதியது தான் பிரச்சினையானது. முதன் முதலாக விசாரணை அதிகாரியான ராமநாதன் ஐ.ஏ.எஸ்., ஐயப்பனை ராமநாதபுரம் வரவழைத்து விசாரித்து விட்டு அனுப்பினார். அதன் பின் சி.பி.சி.ஐ.டி.யினரின் விசாரணையில் ஐயப்பன், புரோக்கர் ஜெயக்குமார் மூலம் பணம் கொடுத்து தேர்வு எழுதியது தெரியவர அவரை சி.பி.ஐ.டி.யினர் ஆரம்ப கட்ட விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்து அனுப்பினர். இதனை நக்கீரன் இணையதளம் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது.
சி.பி.சி.ஐ.டி.யினரின் விசாரணைக்குப் பின்பு தலைமறைவானார் ஐயப்பன். தற்போது புரோக்கர் செயக்குமாரிடம் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து தேர்வு எழுதி குறுக்கு வழியில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியேறவே, சி.பி.சி.ஐ.டி.யினர் ஐயப்பனைத் தேட ஆரம்பித்தனர். அதையடுத்து அதனையறிந்த ஐயப்பன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி சரவணன் முன்பு சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து ஐயப்பனை பேராவூரணி சப் ஜெயலில் அடைக்க உள்ளனர். அவரை சி.பி.சி.ஐ.டி.யினர் தங்களின் கஸ்டடிக்கு எடுக்கலாம் என்று போலீஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.