திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க அரசின் சிப்காட் அலகு மூன்று தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக போராடி வந்தனர்11 கிராம விவசாயிகள். அதில் முக்கியமான 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் கடலூர், புழல், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். தொடர்ச்சியாக விவசாய சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஏழு பேரில் ஆறு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.
மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைப்பதை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உட்பட சில விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேல்மா கிராமத்திற்கு பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து இந்த மக்களோடு நாங்கள் துணை நிற்போம் என பேசினார். அதேபோல் ஆளுங்கட்சியான திமுக சிப்காட் வேண்டும் என சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கோரிக்கை கூட்டம் நடத்தியது. இக்கூட்டம் தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் நடைபெற்றது. மேல்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியினர் திமுகவை விமர்சிப்பதும் பதிலுக்கு திமுகவினர் பாமகவினரை விமர்சிப்பதும் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளராக பெண் ஒருவர் இருக்கிறார்.. இவர் சிப்காட் விவகாரத்தில் திமுக சார்பாக தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் செய்யும் பாமகவையும் விமர்சித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாமகவை சேர்ந்த சிலர் அவரை சமூக வலைதளத்தில் மிக மோசமாக விமர்சித்து உள்ளனர்.
வந்தவாசியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாரின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சாலவேடு பாபு என்கிற ஒன்றியக்குழு கவுன்சிலர் சமூக வலைதளத்தில் திமுக பெண் நிர்வாகியின் புகைப்படங்களோடு மிக மோசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு சாலவேடு பாபு பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த திமுக பெண் நிர்வாகி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.