சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்து மசோதாவை திருப்பியனுப்பியுள்ளார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே கொண்டு வரப்பட்ட மசோதா என்ற ஆளுநரின் கருத்து தவறானது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கக்கூடாது. பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது.
பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளைக் கூறியது சரியல்ல. பல முறை தேர்வு எழுதுவோருக்கு நீட் தேர்வு சாதகமாக உள்ளது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூறி, சட்டமே இயற்றக்கூடாது என ஆளுநர் கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது. உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகாரம் ஒன்றிய அரசிடம் அடங்காது என உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.