தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க முயல்கிறோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (23/01/2021) காலை தமிழகம் வந்தார்.
கோவை விமான நிலையத்திற்கு வருகைதந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் கோவையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பின்னர், கோவையில் சிறு, குறு தொழிற்துறையினருடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் கோவையில் உள்ள சின்னியம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல்காந்தி, "தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க முயல்கிறோம்; இதனால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளைப் பாதுகாப்பேன். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாவாக இருக்கும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் தமிழக அரசை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் மோடி. எனக்கும், தமிழகத்துக்கும் குடும்ப ரீதியான ரத்த உறவு உள்ளது" என்றார்.
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.