திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புலனேரி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் 33 வயதான சீனு. இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள பூரிமாணிக்கமிட்டம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 11 ந்தேதி மாலை எரிக்கோடி சிகே ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவருக்கு நிலத்துக்கு அருகில் உள்ள 90 அடி கிணற்றில் சீனுவின் உறவினர்கள் வளர்த்த கோழி பறந்து சென்று விழுந்து உள்ளது. கிணற்றில் உள்ள கோழியை பிடித்து தரும்படி சீனுவை உறவினர்கள் கேட்டுள்ளனர். சீனுவும் தண்ணீர் இல்லாத அந்த 90 அடி கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கியுள்ளார்.
பாதி தூரம் இறங்கியதும் திடீரென கயிறு அறுந்து, மேலேயிருந்து கிணற்றுக்குள் சீனு விழுந்தார். கீழே விழுந்த அவர் கிணற்றில் கத்தி அழ உறவினர்கள் கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். பின்னர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சீனுவை கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர்.
சீனுவுக்கு தலையில் லேசான காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுயிருந்தது. உடனே 108 வாகனம் வரவைத்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.