தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இதனிடையே, தமிழகம், மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசியைப் பொதுமக்கள் தாமாக முன்வந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், தமிழகம் உள்பட தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன், ஒரு பகுதியாக, தமிழகத்திற்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதீர்குமார் மற்றும் டாக்டர் ரோஹிணி துர்பா ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது.
இந்நிலையில், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஆட்சியருமான சந்தோஷ் பாபுவுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்க வேண்டும் என நினைத்தேன்; ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி. நாங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்; எனது அணிகள் வந்து உங்களைச் சந்திக்கும். எனக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சந்தோஷ் பாபு, நேற்று (17/03/2021) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.