திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயில் காஞ்சிபுரம் வந்தபோது அதனை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதாக கூறியதால் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் விரிவாக்கத்திற்காக மும்தாஜ் பேகம் என்பவரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய இழப்பீடை அளிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இழப்பீடு தொகை அளிக்காதால் திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயிலை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் ரயிலை ஜப்தி செய்ய காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் காந்திருந்தனர்.
ரயில் வந்ததும் ரயிலை ஜப்தி செய்வதாக நீதிமன்ற ஊழியர்கள் ரயில் ஓட்டுநர்களிடம் தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிட பேசுங்கள், எங்ளுக்கு இதைப்பற்றில்லாம் தெரியாது என்று ரயில் ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி பேசியதால் சுமார் 20 நிமிடங்கள் ரயில் அங்கு நின்றது. ரயிலில் இருந்த பயணிகள் நேரம் ஆகிறது என்று கூறியதையடுத்து, பின்னர் நீதிமன்ற உத்தரவெல்லாம் எங்களுக்கு தெரியாது என கூறி ரயில் ஓட்டுநர்கள் ரயிலை ஓட்டிச் சென்றனர். இதனால் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயிலை ஜப்தி செய்ய முயன்றதால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.