16 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறக் கடுமையாகப் போராடி வருகின்றன. மாறாக சென்னை குஜராத் அணிகள் மட்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது.
ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பமான நிலையில் நேற்று நள்ளிரவு முதலே மக்கள் டிக்கெட்களை வாங்குவதற்காகக் குவிந்தனர். அப்போது, டிக்கெட்களை வாங்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத குழந்தையையும் மற்றொரு கையில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றையும் பிடித்திருந்தார். அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் குழந்தையைப் பற்றி விசாரித்தனர்.
ஒரு பெண் அந்த மூதாட்டியிடம் இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. நெடு நேரமானதால் பச்சிளம் குழந்தை பசியால் அழுதுள்ளது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அந்த மூதாட்டி குழந்தைகளின் தாயினை அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். தொடர்ந்து காவல் வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தைகளின் பெயரைக் கூறி குழந்தையை உடனடியாக வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்.
வேகமாக அங்கு வந்த நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு எனது பேரப்பிள்ளைகள் எனக் கூறி நகர முற்பட்டுள்ளார். அவரைப் பிடித்து கண்டித்த காவல்துறையினர் குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தைகளைக் கொடுப்பதாகத் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த நடுத்தர வயது பெண்மணி சென்று குழந்தைகளின் தாயை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்பெண்மணி டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அந்த பெண்மணியிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவரைக் கண்டித்து குழந்தைகளை அவர்களுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.