
சென்னை, கோவை, மதுரையில் நாளை (30/04/2020) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை கடைகளைத் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (29/04/2020) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை முதல் (26/04/2020) க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும் 30/04/2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 06.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

01/05/2020 (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.