தமிழகத்தில் மூன்று அரசு பி.எட்., கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்.
இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விதிகளைப் பின்பற்றாததால் மூன்று கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளைச் சரிசெய்து மூன்று மாதத்தில் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்; அதுவரை மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால் மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியில் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் குமாரப்பாளையம் அரசு பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.