
விழுப்புரம் கே.கே.நகர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ராம சேசு. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, தங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு சொந்த வேலையாக, பெங்களூர் சென்றுள்ளனர்.
ராம சேசுவின் நண்பர் ஜெயசீலனை, ராம சேசு வீட்டின் பாதுகாப்பு கருதி, அவரது வீட்டிற்கு அவ்வப்போது சென்று கண்காணித்து வருமாறு ராம சேசு கூறியுள்ளார். அதன்படி ஜெயசீலனும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் இரவு ராம சேசுவின் வீட்டு முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 60 சவரன் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் தகவல், ஜெயசீலனுக்குத் தெரியவரவே, பெங்களூரில் இருந்த தனது நண்பர் ராம சேசுவுக்குத் தகவல் அனுப்பியுள்ளார். அவர் பெங்களூரிலிருந்து வந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் விநாயகம், வழக்குப் பதிவு செய்து, அவரது தலைமையிலான போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வந்தனர்.
காவல்துறையினர், இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததில், அந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டம் புட்டலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பண்ருட்டி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த பெருமாள், பண்ருட்டி அருகில் உள்ள பூங்குண்ணம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் ராம சேசுவின் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் 3 பேரும் நீண்ட நாட்களாகப் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, ஆட்கள் இல்லாத இரவு நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் தொழிலை செய்துவந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள், ராம சேசுவின் வீட்டில், 60 பவுன் நகை மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடலூரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருந்த, 350 கிராம் நகை சீட்டு உள்பட பல ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கொள்ளையில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.