திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி என இரண்டு பாராளமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள், திருவண்ணாமலை நகரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரையும், அதிமுக சார்பில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும், அமமுக வேட்பாளராக ஞானசேகரனும் நின்றுள்ளனர். அதேபோல் ஆரணி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணுபிரசாத்தும், அதிமுகவில் ஏழுமலையும் நின்றுள்ளனர்.
இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் என்பது 12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த 12 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து திமுக, அதிமுக, அமமுகவினர் திருவண்ணாமலையில் வந்து மண்டபங்கள், சமுதாயகூடங்கள், சத்திரங்களில் தங்கியுள்ளனர். அப்படி தங்கியுள்ளவர்களை வேட்பாளர்கள், கட்சியின் மா.செக்கள், முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.
இதில் திமுக மா.செவும், எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு கட்சி நிர்வாகிகளுடன், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தங்கியுள்ள இடங்களுக்கு சென்று கட்சி முகவர்களுடன் பேசுவதோடு, உள்ளே ஆளும்கட்சி அராஜகத்தில் ஈடுப்படும், நாம் அதில் கவனம் செலுத்தாமல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை யார், யாருக்கு எந்த டேபிள் ஒதுக்கப்பட்டதோ, கடைசி வரை அங்கிருந்து கண்காணித்து வாக்கு விபரங்களை பதிவு செய்துக்கொண்டு வர வேண்டும் என்றார்.
அதிமுக முகவர்களுக்கும் இப்படியொரு அறிவுறுத்தல் நிர்வாகிகளால் வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கைக்காக வந்து தங்கியுள்ள நிலையில், தங்களை சரியாக கவனிக்கவில்லையே என்கிற அதிருப்தியில் உள்ளனர்.
இதுப்பற்றி அதிமுக தரப்பில் விசாரித்தபோது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அதிமுக பெரும்பாலான இடங்களில் தோற்கும் எனச்சொல்வதால் அதிமுக நிர்வாகிகளில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை சோர்ந்துப்போய் உள்ளார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.