திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதனை சுற்றி நூற்றுக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த மாணவ – மாணவிகள் 40 கி.மீ தூரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு தினமும் 500க்கும் அதிகமானவர்கள் படிக்க வருகின்றனர். அப்படி வருபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை டூ செங்கத்துக்கு பேருந்தை இயக்கிவருகிறது. இந்நிலையில் அந்த பேருந்து கடந்த சில தினங்களாக வராமல் நின்றுவிடுவதும், நேரம் கடந்து செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வதுமாக இருந்துள்ளது. இதனால் கல்லூரிக்கு செல்வதும், வேலைக்கு செல்வதும் அதிகம் தாமதமாவதால் பல இன்னல்களை சந்தித்தனர்.
இன்று டிசம்பர் 27ந்தேதி நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் செங்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், பேருந்து வரவில்லை. இதில் அதிர்ச்சியும், கோபமுமான அனைவரும் திண்டிவனம் – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். காலை நேரம் என்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரண்டு புறமும் நின்றன.
தகவலை கேள்விப்பட்டு வந்த போலிஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் பேருந்தை தொடர்ந்து இயக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து தெரிவியுங்கள் என்றனர். இதற்கு அவர்களால் பதில் கூறமுடியவில்லை. இதன்பின்னர், அரசு போக்குவரத்து கழக செங்கம் பணிமனை அதிகாரிகளை வரவைத்து தொடர்ந்து தினமும், சரியான நேரத்துக்கு பேருந்து இயக்குகிறோம் என உறுதிகூறியதன் அடிப்படையில் சாலைமறியலை கைவிட்டனர்.