Skip to main content

தமிழக பக்தர்களை தன்பக்கம் இழுக்க சிலை அமைப்பு தீவிரம் - திருவண்ணாமலையை கடந்தது பெருமாள் சிலை

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
p

 

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ கோரமங்களா அருகேயுள்ளது ஈஜீபுரா. இந்த பகுதியில் கோதண்டராமசுவாமி கோயில் உள்ளது. கோதண்டராமசாமி தேவஸ்தானம் என்கிற தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, இந்த கோயில் வளாகத்தில் 108 அடி உயரத்தில் மகாவிஷ்ணு விஸ்பரூப தரிசனம் என்கிற பெயரில் பிரம்மாண்டமான பெருமாள் சிலை அமைக்க முடிவு செய்தனர். இவ்வளவு பெரிய சிலை செய்ய கற்கள் எங்குள்ளது என சேட்டிலைட் வழியாக தேடியபோது, தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள நீள வாக்கிலான குன்றில் இருப்பது தெரியவந்தது. உடனே தமிழகரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று கற்களை லேசர் மூலமாக கட் செய்து தனியாக எடுத்து சிலைகளை உருவாக்க முடிவு செய்தனர்.

 


ஆனால் அவ்வளவு நீளத்துக்கு கற்களை வெட்ட முடியாது என்பதால் 11 முகங்கள், 22 கைகள் கொண்ட 64 அடி உயரம் கோதண்டராம சுவாமியை ஒரு பாகமாகவும், 24 அடி உயரத்தில் 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை ஒரு பாகமாக என இரண்டு சிலைகள் தனித்தனியாக செதுக்கி பீடத்தோடு சேர்த்து 108அடி உயரத்தில் அமைப்பது என முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடைபெற்றது. சிலைகள் உருவாக்கும் பணிகள் இரண்டு ஆண்டுக்கு முன்பு முடிந்தது. செதுக்கப்பட்ட சிலைகளை பெங்களுரூவுக்கு கொண்டு செல்ல கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த தனியார் அறக்கட்டளை முயற்சி செய்தது. இதற்காக 160 டயர்கள் கொண்ட கார்கோ கண்டெய்னர் வண்டியில் ஒருச்சிலையை ஏற்றினர். மற்றொரு சிலையை அதைவிட சிறிய கார்கோ கண்டெய்னரில் ஏற்றினர். இதற்காக பெரிய கிரேன்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றினர். பெரும் முயற்சிக்கு பின் சிலைகள் கார்கோ கண்டெய்னரில் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்டயிடத்தில் இருந்து 100 மீட்டர் கூட அதால் நகர முடியவில்லை. இதனால் கொண்டு செல்லும் பணி தடைபட்டது. மீண்டும் திட்டமிடல் தொடங்கியது. ஓராண்டுக்கு பின் 2018 டிசம்பர் 6ந்தேதி, ஒரளவு எடை குறைக்கப்பட்ட அந்த சிலைகள், 240 டயர்கள் பொருத்தப்பட்ட கார்கோ கண்டெய்னரில் பெருமாள் சிலை பாகம் மட்டும் ஏற்றப்பட்டது. இதற்கே 5 நாட்களானது. அந்த வாகனத்தின் டயர்கள் பாரம் தாங்காமல் வெடித்தன. அதை சரி செய்துக்கொண்டு பயணத்தை தொடங்கியது அந்த கார்கோ கண்டெய்னர்.

 

p


விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு, செஞ்சி, அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் வழியாக பெங்களுரூ செல்கிறது. திருவண்ணாமலை நகரத்துக்கு வந்த அந்த சிலையை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தில் திரண்டனர். ஜனவரி 8ந்தேதியான இன்று அந்த சிலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை வழியாக செங்கம் சாலையை அடைந்து செங்கத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்து, பெங்களுரூ – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதுதன் பயணத்தை தொடர்ந்தது. தற்போது செங்கம் அருகே அந்த சிலை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


பெங்களுரூ கொண்டு சென்று 108 அடி உயர சிலையை நிறுவ 50 கோடி ரூபாய் திட்டமதிப்பீடாம். இது முழுமுழுக்க தனியார் டிரஸ்ட் செலவு செய்கிறது. அதற்கான வருமானம் சில ஆண்டுகளிலேயே அந்த அமைப்புக்கு வந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சிலையை இன்னமும் நிறுவவில்லை. அதற்குள் கண்டெய்னரில் இரண்டு உண்டியல்களை வைத்து பக்தர்களிடம் காணிக்கை வசூல் வேட்டை நடத்துகிறார்கள். தினமும் சராசரியாக 1 லட்ச ரூபாய் அளவுக்கு உண்டியலில் விழுகிறதாம். 


இந்த சிலை குறித்தே மக்களை பேசவைக்க வேண்டும், மேல்மருவத்தூர் செல்லும் கர்நாடகா, ஆந்திரா பக்தர்களை தன் பக்கம் இழுக்கவும், சபரிமலையில் குவியும் தமிழக பக்தர்களை தன் பக்கம் இழுக்க இப்போது சிலை குறித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டே சாலை வழியை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர்கள் திட்டப்படி பொதுமக்களிடம் இந்த சிலை குறித்த பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தினமும் அதனை காண குவியும் பக்தர்கள் கூட்டத்தை கண்டு அறிய முடிகிறது. 

 

சார்ந்த செய்திகள்