கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை என் பெயரில் வெளியிடப்பட்டாலும், இதில் பலரது உழைப்பு இருக்கிறது. முதல்வர் காட்டிய வழியில் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடன் 2.63 லட்சமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது இல்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார்.
இந்நிலையில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது கவலையைத் தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ''கடந்த அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாகக் கையாளப்படவில்லை. ஊழல் மிகுந்த ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் வாயிலாகக் கடன் சுமை அதிகரித்தது தெரியவந்தது கவலையைத் தருகிறது. தேர்தல் காலத்தில் தந்த அறிவிப்புகளை திமுக அரசு தள்ளிப்போடக்கூடாது ''எனக் கூறியுள்ளார்.
இதேபோல் வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''வெளியான வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு'' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.