முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து வராத நபர்களுக்கு, கடைக்காரர்கள் எக்காரணம் கொண்டும் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்புப் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழுக்கள் கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட 3,000- க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் வாகனங்கள், இயந்திர தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி மருந்துத் தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தினமும் 5 வேளை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இ-பாஸ் அனுமதி பெற்று வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகர பகுதிகளுக்கு வருகை தரக்கூடியவர்களை மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தனிமைப்படுத்தும் பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், பிறமாவட்டங்களில் இருந்து வருபவர்களை பொன்னம்மாபேட்டையில் உள்ள ஐ.ஐ.ஹெச்.டி. கல்லூரி வளாகத்திலும், பிற மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வருபவர்களை கோரிமேடு அரசு பெண்கள் கல்லூரி வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பிறகே மாநகரப் பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
இ-பாஸ் இல்லாமல் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள வருகை தருபவர்களைக் கண்டறிய மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மண்டலங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இ-பாஸ் இன்றி, மாநகரப் பகுதிகளில் நுழைந்த நபர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் வழங்குபவர்கள் மீதும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இ-பாஸ் இல்லாமல் வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகரப் பகுதிகளுக்குள் நுழைந்த 27 பேர் மீது இதுவரை காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதி முதல், மாநகரப் பகுதிகளுக்குள் பொது வெளியில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஏப். 16 முதல் ஜூன் 22- ஆம் தேதி வரை சேலத்தில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து 55.42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த 68 நாள்களில் 63,927 நபர்களிடம் இத்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நிலையங்கள், அம்மா உணவகங்கள், இறைச்சிக் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
கடைக்காரர்கள், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கடைக்காரர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய்த்தடுப்புப் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தாலும், நோய்த்தடுப்புப் பணிகளுக்கு குந்தகம் விளைவித்தாலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் எச்சரித்துள்ளார்.