
ஈரோடு மாவட்டம் பல்லபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, பல்லபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்த பிறகு அவர்கள் கூறுகையில், “இந்த டாஸ்மாக் கடைக்கு குடிக்க வரும் குடிகாரர்கள் போதையில் அவ்வழியாக வரும் பெண்கள், சிறுமிகளுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். ஆகவே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்” என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்புகளுக்குச் சற்றுத் தள்ளி ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு மது அருந்த வரும் சிலர் பெண்கள், பள்ளி கல்லூரி சென்று வரும் சிறுமிகள், மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்வதுடன் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால், சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னர் எங்கள் பகுதியில் பிரச்சனைக்குரிய அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றனர்.