கரோனா, ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. காமராஜர் சாலை, பெசன்ட்நகர் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 31ஆம் தேதி இரவு பைக் ரேஸ், அதிக வேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நேற்று மட்டும் சென்னையில் 13 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் பல இடங்கள் நேற்று இரவு வெறிச்சோடியே காணப்பட்டது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழகம் எங்கும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.