காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (10.01.2025) தொடங்கியுள்ளது. வரும் 17ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள சந்திரகுமார் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.சி.செந்தில்குமார் அதன் பிறகு திமுகவில் இணைந்து திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் வி.சி.சந்திரகுமார் இது குறித்து தெரிவிக்கையில், ''தனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னுடைய நன்றிகள். இந்த தேர்தலை பொறுத்தவரையில் திமுகவினுடைய சாதனைகளுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காண்டுகளாக செய்திருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றியாக இந்த தேர்தல் வெற்றி இருக்க போகிறது.
இந்த வெற்றிதான் இந்த தேர்தலின் கதாநாயகனாக இருக்கப் போகிறது. அந்த வெற்றிக்கு என்னை ஒரு துரும்பாகப் பயன்படுத்தி இருக்கிறார். அதனால் இந்த தேர்தலை பொறுத்தவரை திமுகவின் நான்காண்டு சாதனையும், அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற மதிப்பு மரியாதை எப்படி இருக்கின்றது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு மக்களும், அரசியல் கட்சிகளும் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த முடிவு இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.