தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 45). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். கோயில் வழிபாட்டை முடித்து விட்டு நேற்று மாலை காரில் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். காரை கரிவலம்வந்தநல்லூர் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒப்பனையபுரம் என்ற ஊரை சேர்ந்த அய்யனார் என்பவர் (வயது 42) ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சங்கராபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளி மாணவர்களுடன் பனவடலிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஊத்துமலை பகுதியை சேர்ந்த தங்கம் (வயது 55) என்பவர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கவனித்த பள்ளி பேருந்து ஓட்டுநர் கீழே விழுந்த தங்கம் மீது மோதாமல் இருக்க பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.
அப்போது குருசாமி குடும்பத்தினர் காரில் வந்து கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் வந்த கார் பள்ளி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் காரில் இருந்து மீட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குருசாமி (வயது 45), அவரின் மனைவி வேலுத்தாய் (வயது 35), இவரின் தாயார் சீதாலட்சுமி (வயது 60) மற்றும் ஓட்டுநர் அய்யனார் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குருசாமியின் மகன் மனோஜ் குமார் (வயது 22) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 5 காயமடைந்த நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கிய குருசாமியின் மகள் கற்பகவல்லி (வயது 18) பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் நிலைதடுமாறி விழுந்த தங்கம் சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.